கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். இந்த ஆண்டு அதிக ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன்படி கடற்கரைப் பகுதிகளின் நிலைமையை கண்காணிக்கவும், இதனை கட்டுப்படுத்தும் கலந்தாய்வு கூட்டம் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ஜனவரி மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிகப்படியான ஆமைகள் கரையோரம் இறந்து கிடப்பதற்கான காரணங்கள் மற்றும் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மக்களுக்கு பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் 9.26 கிலோமீட்டர் தூரம் மீன் பிடிக்க கப்பல்கள் இழுவை மடிவலைகளை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. மேலும் ஆமை வெளியேற்றும் கருவி பொருத்தாமல் இழுவை வலையை பயன்படுத்தக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி படகுகளில் ஜிபிஎஸ் டிரான்ஸ்பார்மர் அனைத்து வைக்காமல் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் படகுகளுக்கு அரசு வழங்கும் மானிய டீசல் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட மாட்டாது. ஆமைகள் முட்டையிடும் காலகட்டங்களில் ஒவ்வொரு வாரமும் அதன் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட தகவல்களை மீன்வளத்துறை, மீன் பிடி ஒழுங்குபடுத்தும் காவல் துறைகள் கண்காணிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆமைகளின் நடமாட்டம் குறித்த நீண்ட கால தொலைநோக்கு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆமை இனப்பெருக்க காலங்களில் கடலோரப் பகுதிகளில் தெரு நாய்கள் நடமாட்டம் கட்டுப்பாடு, கடற்கரையோரங்களில் உரிமம் இல்லாத உணவகங்களை ஒழுங்குபடுத்துதல், கழிவுகளை முறையாக அகற்றுதல் போன்றவை அறிவுறுத்தப்பட்டுள்ளன. கடல் ஆமைகள் முட்டையிடும் காலங்களில் கடற்கரை முகப்பு விளக்குகள் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக அணைக்க வேண்டும். போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.