சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஈரோட்டை சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் சரக்கு வேனில் இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர். இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து குழுவினர் அதே வேனில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அந்த வேனை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் குப்பனூர் மலை பாதையில் ஆத்துபாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் மரத்தில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.