திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என்ற மூன்று மின் இழுவை ரயில்கள் மேற்கு கிரிவீதியில் உள்ள நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் குளிர்சாதன வசதி, டி.வி என நவீன வசதிகளுடன் 72 பேர் வரை பயணம் செய்ய கூடிய இரண்டு மின் இழுவை ரயில் பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 27-ஆம் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் புதிய ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. முதலில் ஐந்து டன் அளவுள்ள பஞ்சாமிர்த பெட்டிகளை வைத்து ரயிலை இயக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது பொறியாளர்கள் குழுவினர் பெட்டிகளின் இயங்குத்தன்மை, ரயில் தண்டவாளம், ரோப் தன்மை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, முதற்கட்ட சோதனை ஓட்டம் முடிந்தது. ஐ.ஐ.டி தொழில்நுட்ப குழுவினர் சோதனை செய்த பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்தால் மாற்றி அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறியுள்ளனர்.