நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பதாவது ” உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒளிரும் நட்சத்திரமாகும். கடந்த வருடம் பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இந்த பட்ஜெட் அமையும். நடப்பு ஆண்டில் இந்தியா 7% பொருளாதார வளர்ச்சியை காணும். மற்ற நாடுகளை காட்டிலும் இது அதிகம். இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த பட்ஜெட் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள் கட்டமைப்பு, திறன்மேம்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் நலன் உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் அனைத்தும் என்பதனை நோக்கமாக கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது” என்று அவர் பேசினார்.