இந்திய ரயில்வே நிர்வாகம் மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை இடையே 3 வாரம் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால் தேனி மாவட்ட மக்களுக்கு தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நேற்று முதல் போடி வரை ரயில் சேவை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் காலை 8.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் காலை 9:42 மணிக்கு தேனியை சென்றடையும். அங்கிருந்து புறப்படும் ரயில் காலை 10 மணிக்கு போடியை சென்றடையும். அதன் பிறகு இந்த ரயில் மீண்டும் மாலை 5:50 மணி அளவில் போடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 6:15 மணிக்கு தேனியை சென்றடையும்.
பின் தேனியில் இருந்து புறப்படும் ரயில் இரவு 7.50 மணிக்கு மதுரையை சென்றடையும். இதனையடுத்து சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு ஆண்டிபட்டியை சென்றடையும். இதைத்தொடர்ந்து 8:38 மணிக்கு தேனிக்கும், 9.35 மணிக்கு போடியையும் சென்றடையும். இதேபோன்று போடியிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 8.50 மணிக்கு தேனிக்கும், 9.09 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கும் செல்லும். இதைத் தொடர்ந்து மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். மேலும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் போடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.