
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜீவா நேற்று தேனியில் ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இது உண்மையில் மிகவும் தவறானது தான். முதலில் மீ டு புகார் மூலம் தங்களுக்கு நேர்ந்த பிரச்சினைகளை பலர் கூறினார்கள். தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு விஷயம் நடக்கிறது. இந்த பிரச்சனை எல்லாத்துறைகளிலும் இருக்கிறது. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன் என்றார்.
மீண்டும் பத்திரிக்கையாளர் ஒருவர் அதே கேள்வியை கேட்டதால் கோபத்தில் ஏன் உனக்கு அறிவு இருக்கா. எங்க வந்து என்ன கேள்வி கேட்கிற என்று திட்டினார். அதோடு ஏற்கனவே இந்த கேள்விக்கு பதில் அளித்து விட்டேன். மலையாள சினிமாவில் தான் இந்த பிரச்சனை இருக்கிறது. தமிழில் இதுபோன்ற பிரச்சனைகள் கிடையாது என்று கூறினார். இந்த விஷயம் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் பாடகி சின்மயி நடிகர் ஜீவாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நீங்கள் எப்படி தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல்கள் இல்லை என்று கூற முடியும். மேலும் நீங்கள் எதை வைத்து தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இல்லை என்று கூறுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.