இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களின் சொத்து பட்டியலை ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் 30 முதல்வர்களின் சொத்து பட்டியல் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலின்படி 510 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில் இருக்கிறார். அதன் பிறகு இரண்டாம் இடத்தில் 163 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பேமா காண்டு இருக்கிறார். ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 63 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்திலும், கடைசி இடத்தில் 15 லட்ச ரூபாய் சொத்து மதிப்புடன் மேற்குவங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி இருக்கிறார்.

இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 8.88 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 14-வது இடத்தில் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு கடன் எதுவும் கிடையாது. அவரின் சுய வருவாய் 28.78 லட்ச ரூபாய் ஆகும். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் மீது 47 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த அறிக்கையின் படி அதிக கடன் வாங்கி வைத்திருக்கும் முதல்வர்கள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு 8.88 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இதனையடுத்து 4.99 கோடி ரூபாய் கடனுடன் கர்நாடக மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை இரண்டாம் இடத்திலும், 3.74 கோடி ரூபாய் கடனுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷண்டே மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்.