சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள், மருத்துவ பணியாளர்கள், சிகிச்சைக்கு தேவையான வசதிகள், மருந்து மாத்திரை கையிருப்பு, பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவை தேவையான அளவு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து தனியார் பங்களிப்புடன் சேலம் உருக்காலை வளாகத்தில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் உடைய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் இருக்கிறது.

கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சேலம் அரசு மருத்துவமனை டீன் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜெமினி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.