ஆண்டுதோறும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10-ஆம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரு நாட்களிலோ அல்லது அந்த வாரத்திலோ நாடு முழுவதும் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தகுதியான அனைவருக்கும் கடந்த மாதம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு சார் மற்றும் தனியார் பள்ளிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள், கல்லூரிகள் போன்ற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டது.

சுமார் 2.60 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு அவற்றை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்  இதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கும் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு அந்த மாத்திரை வழங்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதில் விடுபட்டவர்களுக்கு மாத்திரைகளை அடுத்த சில நாட்களுக்குள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரை உட்கொள்வதால் ரத்த சோகை பாதிப்பு நீங்குவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் வலிமையும் மேம்படுகிறது. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத்திரைகள் தனியார் பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.