நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐதராபாத் விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜை சந்தித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு ஹைதராபாத்தை அடைந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை, அதாவது நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் முகமது சிராஜை சந்தித்தார். அப்போது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார். அதே போல் விளையாட்டில் வெற்றி தோல்வி இயற்கையானது என்று சிராஜிக்கு ஆறுதல் கூறினார்.

நிர்மலா சீதாராமன் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீ முகமது சிராஜை சந்தித்து, சமீபத்தில் நடந்து முடிந்த 2023 உலக கோப்பையில்  அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக அவரை வாழ்த்தினார்.

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், முழு அணியினரும் போட்டி முழுவதும் மிகுந்த உறுதியுடனும் விளையாடி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார். அவர் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் மன உறுதியை உயர்த்தினார் மற்றும் வரவிருக்கும் போட்டிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்” என தெரிவித்துள்ளது.

அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது. இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் ஆகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சோகமே மிஞ்சியது.