சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் சென்னை படுதோல்வியை சந்தித்தது. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் விராட் கோலி விளையாடிய போது 22 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்திருந்தார். அப்போது பத்திரனாவுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அதன்படி பத்திரனா பந்து வீசிய நிலையில் அவர் வீசிய முதல் பந்து விராட் கோலியின் ஹெல்மெட்டில் பட்டது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் வந்து விராட் கோலியை பார்த்தார். அடுத்து போட்டி தொடர்ந்து நிலையில் பத்திரனா மீண்டும் பந்து வீசினார். அந்தப் பந்தை கோலி சிக்ஸ் அடித்து விளாசினார். இதைத் தொடர்ந்து அவர் வீசிய 3-வது பந்தையும் பவுண்டரிக்கு அடித்து விளாசினார். பின்னர் நூர் அகமது வீசிய பந்தில் விராட் கோலி 31 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.