தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பார் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ‌பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கரு மற்றும் வசனத்தை தான் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்திற்கு வைத்துள்ளார் எனவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நடிகர் விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஆய்வுக்கூடம் படம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது, வழக்கு தொடரப்பட்ட பிறகு தான் அந்த படத்தை நான் முதன்முதலாக பார்த்தேன். ஆய்வுக்கூடம் படத்திற்கும் பிச்சைக்காரன் 2 படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் ஆவது தள்ளிப் போனதால் தான் பொருளாதார ரீதியாக தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பிச்சைக்காரன் 2 படம் மே 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.