கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊ.மங்கலத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபித்குமார் சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை முடிந்து 17-ஆம் தேதி இரவு குமார் கல்லூரி விடுதிக்கு வந்தார். நேற்று முன்தினம் வகுப்புக்கு சென்ற போது விரிவுரையாளர் துறைத் தலைவரை பார்த்து வருமாறு குமாரிடம் கூறினார். அங்கிருந்து சென்ற குமார் கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த பழனிச்சாமி தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.

நேற்று மாலை 3 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து குமாரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது குமாரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்த தனி அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.