சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய மொபட், மோட்டார் சைக்கிளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று காலை முருகன் தனது வீட்டில் வளர்க்கும் பொமேரியன் வகை நாய்க்குட்டிக்கு வெறிநாய் தடுப்பூசி போடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது டாக்டர்களும், பணியாளர்களும் தடுப்பூசி இல்லை என கூறினர். அதற்கு முருகன் ஏற்கனவே மூன்று மாதங்கள் முன்பு வந்தபோது இதே பதிலைத்தான் கூறினீர்கள். இந்த மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி இல்லை என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மேலும் அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை, நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யலாம் என தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் முருகன் மருத்துவமனையில் இருந்து வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாயமயை தூக்கிக்கொண்டு மனு கொடுக்க சென்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேலம் அரசு கால்நடை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது மருத்துவமனையில் தடுப்பூசி மருந்து தற்போது இருப்பு இல்லை, விரைவில் வந்து விடும். அதன் பிறகு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.