மல்டிபிளெக்ஸ் உள்ளே காபி 700 ரூபாய், தண்ணீர் 100 ரூபாய்: விலையைக் குறைக்காவிட்டால் தியேட்டர்கள் காலியாகிவிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில், மல்டிபிளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தபோது இக்கருத்தைத் தெரிவித்தனர்.

கர்நாடக அரசு மல்டிபிளெக்ஸ் டிக்கெட் விலையை 200 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது என உத்தரவிட்டதை எதிர்த்து, அம்மாநில உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் தடை விதித்தது. அதை எதிர்த்தே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது நீதிபதி நாத், “தண்ணீர் பாட்டிலுக்கு 100 ரூபாய், காபிக்கு 700 ரூபாய் வசூலிக்கிறீர்கள். இது மிக அதிகம். விலையை நியாயமாக நிர்ணயிக்காவிட்டால் மக்கள் வரமாட்டார்கள், தியேட்டர்கள் காலியாகிவிடும்” என சாடினார்.

மல்டிபிளெக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “தாஜ் ஹோட்டலில் காபி 1000 ரூபாய்க்கு விற்கிறது, அதற்கு விலை நிர்ணயம் செய்ய முடியுமா?” என வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி, “சினிமா தொழில் ஏற்கனவே சரிவில் உள்ளது. மக்கள் வந்து ரசிக்கும் வகையில் விலையைக் குறைங்கள், இல்லையெனில் ஹால்கள் வெறிச்சோடிவிடும்” எனத் தெரிவித்தார்.

ரோஹத்கி, “காலியானால் காலியாகட்டும், இது மல்டிபிளெக்ஸுக்கு மட்டுமே. சாதாரண தியேட்டர்களுக்குச் செல்லலாம்” எனக் கூறினார். ஆனால், “சாதாரண தியேட்டர்கள் இப்போது இல்லை, 200 ரூபாய் விலை நிர்ணயத்துடன் உயர் நீதிமன்ற உத்தரவை ஆதரிக்கிறோம்” என நீதிபதி பதிலளித்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் – ஒவ்வொரு டிக்கெட் விவரத்தையும் பதிவு செய்தல், ஆன்லைன்-ஆஃப்லைன் வாங்குபவர்களின் ஐடி விபரம் சேகரித்தல், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் சோதனை – செயல்படுத்த முடியாதவை என ரோஹத்கி வாதிட்டார். வழக்கு விசாரணை தொடர்கிறது.