தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சி. ஜோசப் விஜய் தனது இரண்டாவது அதிகாரப்பூர்வ பயணமாக ஜூன் 10 (புதன்கிழமை) அன்று டெல்லிக்கு புறப்படுகிறார். ஜூன் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மிக முக்கியமான ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) கூட்டத்தில் பங்கேற்பதே இவரது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இக்கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மாநிலத்தின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து முதலமைச்சர் விஜய் மத்திய அரசிடம் அதிரடியாகப் பேச உள்ளார். அன்றைய தினம் மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அளிக்கும் பிரம்மாண்ட இரவு விருந்திலும் அவர் பங்கேற்கிறார்.
மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிடும் முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிதி ஆயோக் கூட்டம் முடிந்த கையோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சில முக்கிய மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்துப் பேசவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்திக்கவும் முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி மாஸ்டர் பிளான் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
