
பாஜக கட்சியின் மாநில தலைவர் மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை தர முடியாது என மத்திய கல்வி மந்திரி கூறிய நிலையில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் இரு மொழிக் கொள்கையை மட்டும் தான் தமிழ்நாட்டில் கடைபிடிப்போம் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்த புதிய கல்விக் கொள்கை அறிக்கையில் மூன்று மொழிகளை படிப்பது கட்டாயம். அதில் தாய் மொழியை முதன்மையான மொழியாகவும் இரண்டாவது ஆங்கிலத்தையும் மூன்றாவது ஹிந்தியையும் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்று மொழிகளை கற்கும் நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மட்டும்தான் இரு மொழிகளை கற்கிறார்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் மொழிக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிப்பதாக கூறுகிறார் அது நல்ல விஷயம் தான். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்கள் மட்டும் இரு மொழி கொள்கையை படிக்கிறார்கள். திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகளை படித்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மட்டும் திமுகவினருக்கு போஸ்டர் ஒட்ட வேண்டுமா.? மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான், விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். எங்கள் கண்முன்னே இளைய சமுதாயம் அழிவதை ஏற்க முடியாது. மேலும் கண்டிப்பாக அரசு பள்ளிகளில் மூன்று மொழிகளை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.