தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த பணிகள் அனைத்தும் இன்னும் முடிவடையாமல் இறுதி கட்ட பணிகள் தாமதமாகி வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுமார் 90 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையம் முன்பாக தென் மாவட்டங்களுக்கு நேரடியாக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 300 பேருந்துகள் நிற்பதற்கான வசதிகளும், பயணிகள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்க் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.