சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கே திடீரென திரும்பியிருப்பது, உலகளவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தியை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த தீர்மானம், சீன அரசால் நேரடியாக அளிக்கப்பட்ட உத்தரவு என்பதாலேயே அவர்களது திரும்பும் நடவடிக்கை விரைவாக நடந்தது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சென்னை தயாரிப்பு யூனிட் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறது. ஏனெனில், அடுத்த தலைமுறையிலான ஐபோன் 17 தயாரிப்பு பணிகள் பெருமளவில் சீன வல்லுநர்களின் மேற்பார்வையிலும், உற்பத்தித் தரமும் அவர்களது கையாளுதலிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

சென்னை பாக்ஸ்கான் ஆலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 2 கோடி ஐபோன்கள், மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.5 கோடி ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகத்தில் விற்பனையான ஐபோன்களில் ஐந்தில் ஒரு பங்கானது இந்தியாவில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது தைவானை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களே இப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சீன வல்லுநர்கள் அனைவரும் வெளியேறியதால், அசெம்பிளி சிஸ்டம், தர நிலை பரிசோதனை, உற்பத்தி கட்டுப்பாடு போன்ற முக்கிய செயல்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஐபோன் 17 வெளியீட்டு காலத்திலும் மாற்றம் ஏற்படலாம் என தொழில்துறை வட்டாரங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

இந்த திடீர் நடவடிக்கையை, சீனா தனது தொழில்நுட்ப திறனை மற்ற நாடுகளுக்கு இழப்பதைத் தவிர்க்கும் ஒரு “பாதுகாப்பு நடவடிக்கையாக” மேற்கொண்டதாகவும், அமெரிக்காவில் ஆப்பிள் உற்பத்தியை கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு எதிராக சீன அரசின் நுணுக்கமான பதிலடி எனவும் பார்வையாளர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இது, இந்தியாவில் ஆப்பிள் உற்பத்திக்கு எதிராக ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளதோடு, உலக சந்தை தேவைக்கும் சிக்கலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வலியுறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக தொழிற்துறை மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகள் தகவல் கேட்டுள்ளன என தெரியவந்துள்ளது. முக்கியமானது, அடுத்த தலைமுறைக்கான ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கே இந்த செயல் எதிராக செயல்படலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.