மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 5 நாள் அலுவல் பயணமாக ஜப்பான் செல்கிறார். அவருடன் மாநில மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குணர் ஷில்பா பிரபாகர் சதீஷ், புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சரவணன், ஆறுமுகம், பிரசன்னா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா ஆகியோரும் ஜப்பான் செல்கின்றனர். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புற்றுநோய் பாதிப்பு உலக அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது.

தமிழகத்தில் வருடம் தோறும் 80 ஆயிரம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜப்பான் உலக அளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதில் முன்னோடி நாடாக திகழ்கிறது. ஜப்பானில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் சிகிச்சை முறைகள் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கேட்டுக் கொண்ட காரணத்தினால் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, ஜப்பான் நாட்டின் புற்றுநோய் கொள்கை ஆராய்ச்சி சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை அறிந்து கொள்வதற்காக 5 நாள் பயணமாக ஜப்பான் செல்கின்றோம்.

மேலும் மத்திய அரசின் பிரதிநிதிகளும் வருகின்றனர். இனிவரும் காலங்களில் தமிழக மருத்துவர்களை ஜப்பானுக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வது செய்வதற்கு இந்த பயணம் உதவியாக இருக்கும். ஏற்கனவே ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. கோவை கீழ்பாக்கம் மதுரை மருத்துவக் கல்லூரிகளில் புதிய மருத்துவமனைகளை கட்டுவது உட்பட சுகாதாரத் துறைக்கு ரூ.1,387.88 கடன் வழங்கியுள்ளது. அந்த நிதி உதவியுடன் சுகாதாரப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.