ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வுகள் தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது மலார்னா நிலையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10-ம் வகுப்பு தேர்வுகளின் போது, தேர்வின் நேர்மை முற்றிலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த தேர்வை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆகிய இருவரும், மாணவர்களுக்கு நேரடியாக விடைகளை சொல்வது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு ஆசிரியர் ஜீன்ஸ் மற்றும் செக்கர்ஸ் சட்டை அணிந்து கையில் பதில்களைக் கொண்ட காகிதத்துடன் ஒரு மேஜையில் அமர்ந்து மாணவர்களுக்கு (A, B, C, D) குறியாக விடைகளை கூறுகிறார். இதேபோல், புகைப்படக் கலைஞராக உள்ள நபர், கட்டம் போட்ட சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து மாணவிகளிடம் பதில்களை சொல்வது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

மேலும், மாணவர்கள் பயமின்றி ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பிரதிகளை பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த அலட்சியம் தேர்வு முறையின் நம்பகத்தன்மையைப் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த வீடியோ கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி ஹர்கேஷ் மீனா இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க, விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் “வீடியோவில் காணப்படும் அனைத்து விபரங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் உறுதியளித்தார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து கல்வியின் நேர்மை, மாணவர்களின் எதிர்காலம் போன்றவற்றை பாதிக்கும் இத்தகைய செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.