
தென்னிந்திய சினிமாவில் 1990’களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர் நடிகை மீனா. தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனா தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீனா சமீபத்திய பேட்டியில் தன் சினிமா வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய இளம் வயதில் எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அதற்கான அர்த்தம் அப்போது புரியவில்லை. இப்பதான் புரியுது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு சினிமா இண்டஸ்ட்ரி மாற ஆரம்பித்தது. புதிது புதிதாக பலர் வர ஆரம்பித்தனர்.
அந்த சமயத்தில்தான் கிளப்பிங் மற்றும் பப்பிங் போன்றவைகள் எல்லாம் ஸ்டார்ட் ஆனது. என்னுடைய நண்பர்கள் பப்புக்கு செல்லலாம் என்று கூப்பிடுவார்கள். ஆனால் என்னுடைய அம்மா அனுமதிக்க மாட்டார். நான் அவரிடம் பலமுறை சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என் அம்மா அதற்கு அனுமதிக்க மாட்டார். என் மீது எந்த ஒரு கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதில் என் அம்மா கவனமாக இருந்தார். என்னை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என என் அம்மா விரும்பினார். எப்போதும் என்னை சுற்றி யாராவது இருப்பார்கள். நான் தனியாக எங்குமே சென்றது இல்லை.
என்னுடைய கணவர் தான் உன் விருப்பப்படி இரு. உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு சம்மதிக்காதே என்றார். அவர் கொடுத்த தைரியத்தில் தான் நான் தனியாக வெளிநாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தேன். என் கணவரிடம் என் அம்மாவால் எதுவுமே சொல்ல முடியாது. நான் இப்போது தனியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறேன் என்றால் அதற்கு என் கணவர் தான் காரணம். நான் தற்போது அவரை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மீனாவுக்கு திருமணமாகி வித்யாசாகர் என்ற கணவர் இருந்த நிலையில் கடந்த வருடம் அவர் உடல் நல குறைவினால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.