உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள போபா ரோட்டில் அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் அலுவலகத்தில் நடந்த கொடுமையான சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தொழிலதிபர் ஒருவர், தனது டிரைவரான மனோஜ் யாதவிடம் உன்னை நீயே சுமார் 20 முறை அடித்து கொள் என கட்டாயப்படுத்தும் காட்சி பதிவாகி உள்ளது.

அதற்கு மனோஜ் தன்னை தானே  மெதுவாக அடித்ததால், அருகில் இருந்த பவுன்சரிடமிருந்து வலிக்குமாறு மனோஜை அடிக்குமாறு தொழிலதிபர் கூறுகிறார். ஆனால் வீடியோவில் தொழிலதிபரின் முகம்  தென்படவில்லை என்றாலும், அவரது குரல் தெளிவாகக் கேட்கப்படுகிறது.

இதற்கு காரணம், மனோஜ் தனது தாத்தாவின் உடல்நலக் கோளாறு  காரணமாக ₹10,000 பணம் கடன் வாங்கியதோடு, விடுமுறையும்   கேட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, தொழிலதிபர் அவரை அலுவலகத்திற்கு வரவழைத்துப் அவமதிப்பும், கெட்ட சொற்களையும் கூறி அத்துமீறி  நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த வீடியோ வெளியானதும், அனைத்து டிரைவர் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்டத் தலைவர் பிரின்ஸ் யாதவ், “இத்தகைய நடத்தை ஏற்க முடியாதது” என கூறி, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி அவர்களிடம் முறையிட திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, நியூ மண்டி காவல்துறையினர் சம்பவத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் நிலைய பொறுப்பாளர் தினேஷ் சந்த் பாகேல் கூறுகையில், “தற்போது வரை எதுவும் எழுத்துப்பூர்வ புகார் பெறவில்லை, ஆனால் புகார் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.