மத்திய பட்ஜெட் 2023-24 வருகிற பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை அடுத்த நிதி ஆண்டில் உயர்த்தும் விதமான சிறப்பு அறிவிப்புகள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதாவது உலக நாடுகள், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, போர் போன்ற பல்வேறு காரணங்களால் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எந்த அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சிக்கு சில காரணிகள் முக்கியமானவை என்றும் அவை பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் எனவும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

அதாவது உள்நாட்டு சந்தையை மேம்படுத்த உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவது போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தலாம். ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் க்ரிப்டோ கரன்சிக்கு வரி விதித்தல் போன்றவற்றில் தெளிவான சட்டங்கள் தேவை. ஜிஎஸ்டி வரி விதிப்பில் சரியான கொள்கை சீர்திருத்தம் தேவை. அதன் பிறகு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மேம்படுத்த சிறப்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். மேலும் கொரோனா காலகட்டத்தின் போது சுகாதார பாதுகாப்பு திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிட வேண்டி இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.