
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தற்போது பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் யானை சின்னம் இருக்கிறது. ஆனால் யானை சின்னம் தேசிய கட்சி ஆன பகுஜன் சமாஜ் கட்சிக்கு சொந்தமானது என்பதால் அந்த சின்னத்தை உடனடியாக தமிழக வெற்றிக்கழகம் நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அந்த கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இதற்கு சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னம் எந்த ஒரு கட்சியின் சின்னத்தோடும் ஒற்றுமையாக இல்லை. அதன் பிறகு கொடியில் உள்ள கட்சி சின்னங்களை தேர்தல் ஆணையம் தேர்வு செய்வதில்லை எனவும், அந்தந்த கட்சிகள் தான் தேர்வு செய்கிறது எனவும், எனவே ஒரு கட்சியில் உள்ள சின்னத்தை மற்றொரு கட்சியின் கொடியில் இடம்பெறாதவாறு தாங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியது.
இந்திய தேர்தல் ஆணையம் கட்சிக் கொடியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று விளக்கம் கொடுத்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது யானை சின்னம் எங்களுடையது என்பதால் உடனடியாக கட்சி கொடியிலிருந்து அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதோடு இன்னும் 5 நாட்களில் யானை சின்னத்தை கட்சி கொடியிலிருந்து நீக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தற்போது கட்சி கொடியில் இப்படி ஒரு பிரச்சனை எழுந்துள்ளது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.