தேமுதிக தனித்து களம் காண வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர் எனவும், 14 சீட் தருவோருடன் கூட்டணி எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் கூட்டணி தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி. அதிக சீட் தரும் கூட்டணியோடு தான் இணைவோம் என்பதில் தேமுதிக மாவட்ட செயலாளர்களின் நிலைப்பாடு. தேமுதிக சார்பில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாங்கள் பேசவில்லை. 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட்டு தரும் அணியுடன் தான் கூட்டணி. யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எல்லா கட்சிகளும் சீட்டுகளை பொறுத்தே முடிவு எடுக்கின்றன. கட்சி தொடங்கும் போது தேமுதிகவின் சித்தாந்தம் கொள்கைகளை விஜயகாந்த் அறிவித்து விட்டார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்கள் என்றார். மேலும் அரசு மரியாதையுடன் கேப்டனின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்ட அரசுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.