
அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ தளவாய் சுந்தரம். இவரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிகமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததால் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.
இதன் காரணமாக அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை தான் தொடங்கி வைப்பது இத முதல் முறை அல்ல என்றும் என்னுடைய கட்சிப் பதவியை பறித்தது குறித்து நான் எந்தவித கவலையும் படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதோடு கட்சியிலிருந்து நீக்கிவிட்டால் ஓகே ரைட் என்று சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியதுதான் என்று கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே அவர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அவர் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளதால் அவர் விரைவில் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது.