தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் வீடு உள்ளது. இவருடைய வீட்டின் மீது உஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கமிட்டி உறுப்பினர்கள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் வீட்டின் மதில் சுவர்‌‌ ஏறி‌ குதித்து கற்களை வீசி தாக்கினர்.‌அதோடு உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு 1 கோடி‌ நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 8 பேரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவில், உங்களின் உணர்ச்சிகளை பொறுப்புடன் வெளிப்படுத்துங்கள். தயவுசெய்து அருவருக்கத்தக்க விஷயங்களில் ஈடுபடாதீர்கள். சமூக வலைதளங்களில் ‌ போலி ஐடிகள் மற்றும் போலி சுய விவரங்கள் மூலம் எனது ரசிகர்கள் என தவறாக சித்தரித்து தவறான பதிவுகளை வெளியிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டிற்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு பூந்தொட்டிகளையும் உடைத்து தாக்குதல் நடத்தியது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.