நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது திமுக எம்பிக்கள் தமிழ்நாடு கல்வி நிதி மறுப்பு விவகாரம் ஈடுபட்டனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியதாவது, பாஜக ஆளாத மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு முதலில் விருப்பம் தெரிவித்தது. கடைசியில் யூ-டர்ன் அடித்து விட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன் வந்தார். ஆனால் சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்து விட்டனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார்.

அதோடு திமுக எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒரு மணி நேரத்தில் தான் சொன்ன கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் தற்போது தர்மேந்திர பிரதான் பேச்சு நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு எதிராக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.