தமிழகத்தில் முதல் முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை பாதிப்பை ஒட்டி ஆவின் வரலாற்றில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆவின் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையை பொறுத்தவரை பால் விநியோகத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் சிக்கல்கள் என்பது நீடித்து வருகிறது. முக்கியமாக அம்பத்தூர் பால் உற்பத்தி மையத்தில் மழை நீர் என்பது முழுமையாக வடியாத நிலையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டது.

இதனை சமாளிக்கும் வகையில் தற்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், ஆவின் வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசன்ட் நகர், அண்ணா நகர் ஈஸ்ட், சோளிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட 8 மையங்களில் சில நாட்கள் தேவைக்கேற்ப  24 மணி நேரமும் ஆவின் மையங்கள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இதில் ஆவின் பால், பால் பவுடர், பால் உப பொருட்கள் அனைத்து நேரங்களிலும் முழுமையாக கிடைக்கும். இதனை அவர்கள் நேரடியாக சென்று வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். பால் தட்டுப்பாடை சமாளிக்க இந்த 8 மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இதன் மூலம் பால் தட்டுப்பாட்டில் இருக்கும் பிரச்சினைகள் முழுமையாக களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.