தமிழகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். அதாவது அரசாங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துடன் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர். அதன் பிறகு சிஐடியூ மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். நாளை எங்களுடைய பேரவை கூட்டம் நடைபெறும் நிலையில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும் இடையே உள்ள ஒரு தொடர்பு இந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்டுள்ளது. எதையுமே ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறிய நிர்வாகம் தற்போது அமைச்சர்களின் பேச்சு வார்த்தையின் மூலம் ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு எங்களுடைய பாராட்டுகள். தொழிற்சங்க பதிவு அங்கீகாரம் என்பது எங்களுடைய உடனடி கோரிக்கைகள் எல்லாம் கிடையாது. சங்க அதிகாரத்தையும் சங்கம் பதிவு செய்வதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இன்று நடந்த பேச்சு வார்த்தை எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சர்களுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு காரணமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.