சென்னை அருகே கவரப்பேட்டையில் சமீபத்தில் சரக்கு ரயில் ஒன்று பயணிகள் ரயில் மீது மோதி 13 பெட்டிகள் வரை தடம் புரண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த 11ஆம் தேதி இரவு இந்த விபத்து நடைபெற்ற நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் சதி என்று புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது ரயிலை கவிழ்க்க சதி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லூப் லைன் பகுதியில் போல்ட் மற்றும் நட்டு ஆகியவற்றை கழட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலை கவிழ்க்க சதி நடப்பதாக தெரிவித்தது. மேலும் ஏற்கனவே நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்துக்கும் சதிவேலை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.