சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவு சின்னம் கடலுக்கடியில் அமையப்பட இருக்கிறது. இதற்காக திமுக அரசு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேனா நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவுச் சின்னம் வரை உயர்மட்ட கண்ணாடி பாலமும் அமையப்பட இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி கொடுத்துள்ள நிலையில் மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலுக்குள் பேனா நினைவு சின்னத்தை அமைப்பது தொடர்பாக கலைவாணர் அரங்கில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில் பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் வைப்பதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்துள்ளார். இவரை போலீசார் கூட்டத்திலிருந்து பாதுகாப்பாக வெளியில் அழைத்து வந்த நிலையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எழுதாத பேனாவை ஆயுத பூஜைக்கு வைத்து கும்பிட்டால் மூடநம்பிக்கை. எழுதாத பேனாவுக்கு சிலையா என்று கேள்வி எழுப்பினார். அதோடு பேனா நினைவு சின்னத்தை பார்க்க வரும் மக்கள் நெகிழி கழிவுகளை கடலுக்குள் போடுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அரசு பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லை கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு மட்டும் நிதி இருக்கிறதா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.