
தமிழகத்தில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆன நிலையில் இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மூன்று இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் அவர் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார்.
நேற்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கரூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு, ரெயின்போ நகர் அலுவலகம் மற்றும் அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. போலி ஆவணங்கள் மூலமாக 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.