
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி அமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய பாதுகாப்புக்கான இஸ்ரேலின் மிகுந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி இந்த தாக்குதல் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாக்குதலின் போது, விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. விமான நிலையத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அங்கு வந்திருந்த பயணிகள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அருகிலுள்ள சாலைகளிலும் பொதுமக்கள் பதற்றத்துடன் ஓடிச் சென்றனர். உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமான நிலையத்துக்கு அருகிலுள்ள முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த தாக்குதலால், டெல்லியில் இருந்து டெல் அவிவுக்கு புறப்பட்டிருந்த ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் இலக்கை அடைய முடியாமல் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் பரஸ்பர ஆலோசனை செய்து, மீண்டும் திருப்பி விடப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் பாதுகாப்பாக மற்றொரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.