ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று 14 நகரங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில் இன்று நேற்று நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இந்த பேட்டியின் போது விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது,

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை முன்னோக்கி நகர்த்தி வந்த நிலையில், அவை அனைத்தையும் இந்தியா திறம்பட இடைமறித்து பதிலடி கொடுத்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட இலக்குகளில் மட்டுமே துல்லியமான தாக்குதலை இந்திய படைகள் மேற்கொண்டன.

இந்தியாவின் S-400 ஏவுகணை அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்ப முயற்சித்துள்ளது.

பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான செய்திகளை, இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது.

“பாகிஸ்தானின் அனைத்து விதமான தாக்குதல்களையும் திறம்பட முறியடிக்க இந்தியப் படைகள் தயார் நிலையில் உள்ளன!

எல்லைப் பகுதிகளில் போர் பதற்றத்தை அதிகரிக்காமல், பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம்”.

மேலும் இந்தியா பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைக்கும் நிலையில் அவர்கள் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து தாக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்று கூறினார்.