அனுமதியின்றி லியோ திரைப்படத்தின் பேனர் வைக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், லியோ படத்தின் பேனர்களை அனுமதியின்றி எந்த இடத்திலும் வைக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடித்து வெளியாக இருக்கக்கூடிய ‘லியோ’ திரைப்படத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தின்  பல்வேறு திரையரங்குகள் முன்பு ரசிகர்களால் மிக உயரமான நீளமான பேனர்கள், கட்டவுட்டுகள், பிளஸ் வைக்கப்பட்டுள்ளன.. மேலும் விதிகளை மீறி வாகனம் நிறுத்துதல் மற்றும் பயங்கர சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கவும் இருக்கின்றனர்.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் உயிர் பலிகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றெல்லாம் தனது மனுவில் தெரிவித்திருந்து, இதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரையரங்கின் முன்பு பிளக்ஸ் பேனர் வைக்க எந்த ஒரு அனுமதியும் தாங்கள் கொடுக்கவில்லை என தெரிவித்தனர்..

இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் அனுமதி இன்றி உள்ளன என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து மாநகராட்சி பகுதிக்குள் ஏதேனும் பிளக்ஸ் பேனர்கள் இருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. அப்போது அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ்கள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டன என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அனுமதி இன்றி ‘லியோ’ படத்தின் எந்த பேனர்களும், பிளக்ஸ்களும் எந்த ஒரு இடத்திலும் வைக்க கூடாது என தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்..