ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் வாயிலாக கோவை வந்தடைந்த உதயநிதி, சாலை மார்க்கமாக ஈரோடு புறப்படுகிறார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுப்பதாக முன் வைக்கப்படும் கருத்துக்கு மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள் என பதிலளித்தார். மேலும் சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது பற்றி கேட்டதற்கு, அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?… என உதயநிதி கேள்வி எழுப்பினார்.