தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அண்ணாமலை இரு பிரிவினர்களிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து வெளியிட்டதாகவும் கூறி 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று வதந்தி பரப்பியதாக கூறி பீகார் பாஜக ட்விட்டர் கணக்கு மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வதந்தி விவகாரத்தில் பீகார் பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.