வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புது திருத்தப்பட்ட விதிமுறைகள் சென்ற ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உட்பட பல்வேறு புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது விதிமுறைகளை செயல்படுத்துவதற்குரிய காலக்கெடுவை நடப்பு ஆண்டு டிசம்பர் இறுதி வரையிலும் நீட்டித்து ரிசர்வ் வங்கியானது உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கையில், “புது விதிமுறைகளானது கடந்த 2021ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன்பின் இதுபற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து பெற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதுவரையிலும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

ஆகவே விதிமுறைகளை புதுப்பித்தல் செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடு வருகிற டிசம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட விதிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரியப்படுத்தி, ஜூன் 30 மற்றும் செப்டம்பர் 30-க்குள் முறையே 50 மற்றும் 75 % பேரை புது விதிமுறைக்கு இணங்கச் செய்யவேண்டும்” என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.