சர் சி.வி ராமன் விளைவு கண்டறியப்பட்டதில் பின்னணி என்னவென்றால் ஒரு முறை ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ராமன் கப்பலில் சென்றார். அப்போது வானம் ஏன் இவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என யோசித்தார். அது குறித்து பல ஆராய்ச்சிகளை செய்தார்.

அதன் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளாகவோ திரவப் பொருளாகவோ அல்லது வாயு பொருளாகவோ இருக்கலாம். அந்த ஊடகங்களில் ஒளி செல்லும் போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக ஒளியின் மூலக்கூறு சிதறல் ஏற்படுகிறது என்ற உண்மையை கண்டறிந்தார்.. இதற்காக ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சர் சி.வி ராமன் ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1986-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு அந்த தினத்தை அறிவித்தது. அதே நாளில் அறிவியலை பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டு வருகிறது.