தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஆனந்திக்கு பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆனந்தி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்தார்.

ஆனால் யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து அறிந்த ஆனந்தியின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டு குழந்தையின் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு குழந்தையின் உடலுடன் ஆனந்தின் உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.