இமாசலப்பிரதேசத்தில் அதானி குழுமத்தின் கீழ் இயங்கக்கூடிய வில்மர் நிறுவனத்தின் மீது GST வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அருணாசலப்பிரதேசத்தின் வரி விதிப்புத் துறை, வில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று(பிப்,.9) சோதனை மேற்கொண்டு வருகிறது. பங்குகளின் விலையை உயா்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனமானது ஜன,.24ம் தேதி ஆய்வறிக்கை வெளியிட்டது. இதனால் பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்தை சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தது.

இதற்கிடையே அதானி குழுத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில், அதன் முதலீட்டாளா்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியது. மேலும் அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகளும் பங்குச்சந்தைகளில் தொடர் சரிவை சந்தித்த சூழ்நிலையில், இமாசலப்பிரதேசத்தில் இப்போது ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரில் அதானி நிறுவனம் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பல வருடங்களாக அதானி குழுமத்தின் அதானி வில்மர் நிறுவனம் வசூலித்த GST தொகையை செலுத்த தவறியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து இமாசலப்பிரதேச மாநில வரித்துறை அதிகாரிகள் பல அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இமாசலப்பிரதேசத்தில் சரக்கு கட்டணங்கள் திருத்தப்பட்டதை அடுத்து, அங்கு அதானி குழுமம் இயங்கிவந்த 2 சிமெண்ட் ஆலைகளை மூடிவிட்டது. இதன் காரணமாக அதானி குழுமத்துக்கும், சரக்கு லாரி உரிமையாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் போக்கு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.