உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது. இதன் காரணமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டும் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்தது. இதன் விளைவாக தற்போது சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து இந்தியா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு அதிக அளவில் தேவை என்பதால் தற்போது மக்கள்தொகை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருமணம் செய்து கொள்ளாமலும் ஒரு பெண்மணி செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது. அதன்பிறகு விருப்பமுள்ள தனி பெண்கள் வாடகை தாய் முறையிலும் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மகப்பேறு காலம் விடுமுறையுடன் சேர்த்து புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும் அரசு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்துள்ளது.