ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி சீனாவுக்கு புறப்பட்டது.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து சீனாவுக்கு இன்று (வியாழக்கிழமை) புறப்பட்டது. இந்திய அணி தனது பயணத்தை அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்திய அணி மும்பையிலிருந்து சீனாவுக்கு புறப்பட்ட புகைப்படங்களை SAI தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘ஆண்கள் கிரிக்கெட் அணி 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராக உள்ளது. இந்திய அணி மும்பை விமான நிலையத்திலிருந்து ஹாங்சோவுக்கு புறப்பட்டது. அவர்கள் சிறப்பாக செயல்பட நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

இந்தியா நேரடியாக காலிறுதியில் விளையாடும் :

ஐசிசி டி20 சர்வதேச தரவரிசையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் முதல்-5 இடங்களைப் பிடித்துள்ளன. எனவே அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறது. இந்திய அணி அக்டோபர் 3ஆம் தேதி முதல் போட்டியில் ஆடுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்குவார் :

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அணியில் இடம் பிடித்துள்ளார். சிவம் துபே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட ரின்கு சிங்கும் இருப்பதால் இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே மகளிர் இந்திய அணியை போலவே இந்திய ஆண்கள் அணியும் தங்கத்தோடு தாயகம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி :

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே மற்றும் பிரப்சிம்ரன் சிங்.

காத்திருப்பு வீரர்கள் :

யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் சாய் சுதர்ஷன்.