ஆசிய கோப்பை சூப்பர் 4ல் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

2023 ஆசியக் கோப்பை-இன் குரூப்-ஸ்டேஜ் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர்-4க்கு முன்னேறியுள்ளன. அதில் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே  நேற்று லாகூரில் நடைபெற்றது. இந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாமுல் ஹக் 78 ரன்களும், முகமது ரிஸ்வான் 63 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகார் ஜமான், இமாம் ஹக் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்தனர். ஷோரிஃபுல் இஸ்லாம்  ஃபகார் ஜமானை 20 ரன்களில் அவுட்டாக்க, கிரீஸுக்கு வந்த பாபர் அசாம், இமாம்-உல்-ஹக்குடன் இணைய பாகிஸ்தான் 50 ரன்களைக் கடந்தது. பின் 17 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பாபர் அசாமை தஸ்கின் அகமது வெளியேற்றினார். பாகிஸ்தான் 74/2 என இருந்தது.

அதனைத்தொடர்ந்து முஹம்மது ரிஸ்வானும், இமாம் உல் ஹக்கும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். அதன்பின் பாகிஸ்தான் 159 ரன்கள் எடுத்த நிலையில் முஹம்மது ரிஸ்வானும், இமாம் உல் ஹக்கும் பிரிந்தனர். சதத்தை நோக்கி நகர்ந்த இமாம் உல் ஹக் மெஹ்தி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இமாம்  84 பந்துகளில் (5 பவுண்டரி, 4 சிக்ஸர்) 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி ஆகியோர் சேர்ந்து போட்டியை முடித்து வைத்தனர். முகமது ரிஸ்வான் 63 ரன்களுடனும், சல்மான் அலி 12 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். 

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னால் சரிந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்தை பாகிஸ்தான் 193 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. வங்கதேச வீரர்கள் 38.4 ஓவர்களில் பாக் பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் சிறப்பாக செயல்பட்டனர்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த ஷாகிப்பும், முஷ்பிகுரும் வங்கதேசத்தை  காப்பாற்றினர். முஷ்பிகுர் 87 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 64 ரன்கள் எடுத்து வங்கதேச அணியில் அதிக ரன் குவித்தார். ஷகிப் 57 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள் உட்பட 53 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் முகமது நயீம் 25 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். மெஹ்தி ஹசன் (0), லிட்டன் தாஸ் (16), தௌஹித் ஹ்ரிடோய் (2) என மற்ற முக்கிய வீரர்கள் தோல்வியடைந்தனர்.

6 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹாரிஸ் ரவூப் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஷஹீன் அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரப் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.