ரவி அஸ்வின், சாஹல் மற்றும் சுந்தர் உட்பட யாருக்கும் உலகக் கோப்பைக்கான கதவுகள் மூடப்படவில்லை என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்..

பிசிசிஐ தேர்வாளர்கள் டெல்லியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஆசிய கோப்பை போட்டிக்கான அணியை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இன்று அறிவித்தனர், சஞ்சு சாம்சன் காத்திருப்பு வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. ரோஹித் ஷர்மா தலைமையில் ஆசிய கோப்பைக்கு அணி நுழைகிறது. ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார். கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இரு வீரர்களும் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வருகின்றனர். திலக் வர்மா முதல் முறையாக ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆசியக் கோப்பைக்கான அணியில் ரோஹித் சர்மாவைத் தவிர ஷுப்மான் கில், விராட் கோலி, திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆசிய கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசியக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்த வீரர்களே பெரும்பாலும் 2023 உலககோப்பைக்கு தேர்வாக வாய்ப்புள்ளது..

டெல்லியில் இன்று பிசிசிஐ செய்தியாளர் சந்திப்பில் ரோகித் சர்மா, அஜித் அகர்கர் கலந்து கொண்டு அணியை அறிவித்தனர். மேலும் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைக்கான திட்டங்கள் குறித்து பேசினார். ஆசிய கோப்பையில் இடம்பெறாத வீரர்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

ரோஹித் சர்மா பேசியதாவது,  “யூசி சாஹல் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார், எங்களுக்கு அவர் தேவை என்று நினைத்தால், மீண்டும் அணிக்கு திரும்பலாம். ரவி அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரும் அதேபோலத்தான். முழு அணியும் உங்களுக்கு வெற்றியைத் தருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் மூவரும் அணியின் பேட்டிங்கிற்கு பெரிதும் உதவுகிறார்கள். வீரர்களை சேர்க்க வரம்பு இருப்பதால் சாஹலை அணியில் சேர்க்க முடியவில்லை. உலகக் கோப்பையில் அவரைப் பார்க்க நிச்சயமாக நாங்கள் விரும்புகிறோம். ரிஷப் பந்த் ஆசிய கோப்பைக்கு தயாராக இல்லை. அவர்களுக்கு இன்னும் சிறிது நேரம் ஆகலாம். எனவே அனைவருக்கும் கதவுகள் திறந்தே உள்ளன”என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் அஜித் அகர்கர் கூறுகையில், ஆசிய கோப்பை அணியை அறிவித்த பிறகு நாங்கள் மிகவும் நன்றாக உணர்கிறோம். கடந்த சில நாட்களாக காயங்களுடன் போராடி வருகிறோம். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் அடைந்தனர், ஆனால் இப்போது அவர்கள் திரும்பினர். பிசியோவிடம் அவரது அறிக்கையையும் கேட்டுள்ளோம். இவர்கள் இருவரும் எங்களின் சிறந்த வீரர்கள். எங்களிடம் 17 வீரர்கள் உள்ளனர். ஆசிய கோப்பையில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஷுப்மான் கில், இஷான் கிஷான் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரையும் அணியில் சேர்க்க முடியவில்லை.” என்றார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ். ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (காத்திருப்பு வீரர்)