விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி களிங்கல் பகுதியில் முதுமக்கள் தாழிகள் உட்பட ஏராளமான பழங்கால வரலாற்று தடயங்கள் இருக்கிறது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்பரப்பாய்வில் ஈடுபட்டு குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு ஒன்றை கண்டெடுத்தார்.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி களிங்கல் பகுதியானது மாபெரும் புதைவிடமாக இருந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இருப்பதோடு, கருப்பு, சிவப்பு பானை ஓட்டில் குறியீடுகள் காணப்படுகிறது என கூறியுள்ளார்.

அந்த பானை ஓட்டை ஆய்வு செய்த மூத்த தொல்லியலாளர் துளசிராமன் கூறியதாவது, அந்த குறியீடுகள் மலை அல்லது வாழ்விட கூடாரங்களை குறிப்பிடுவதாக உள்ளது. இவை சங்க கால காசுகளிலும் காணப்படுகிறது. எனவே இந்த பானை ஓடும் சங்க காலத்தை சேர்ந்தது என கூறியுள்ளார்.