
மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பாட்னவிஸ் தலைமையிலான அரசு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
அதாவது 3ஆவது மொழியாக இந்தி மொழி இருக்கும் என தெரிவித்தது. இதனை அடுத்து அந்த அறிவிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மான் சேனா கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து மாநில அரசு தனது அறிவிப்பை திரும்ப பெற்று உள்ளது.
அதனை கொண்டாடும் விதமாக, இரு கட்சிினரும் மும்பை ஆசாத் மைதானத்தில் வெற்றி விழா பேரணியை நடத்தினர். அந்நிகழ்ச்சியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே கூறியதாவது, “சிவசேனா நிறுவனர் செய்ய முடியாத காரியத்தை தேவேந்திர பட்னவிஸ் செய்துவிட்டார். எனது சகோதரரும் நானும் இணைந்து விட்டோம்.
இனிமேல் மராட்டியத்தில் இந்தி திணைப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என கூறினார். சகோதரர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக ஒரே மேடையில் தோன்றியதை அடுத்து இரு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாக மிகுதியில் கோஷங்களை எழுப்பினர்.