மராட்டிய மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த பெண் மந்திரி ஒருவருக்கு சமூக வலைதளம் மூலம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்துள்ளன. மேலும் அந்த நபர் அடிக்கடி அந்தப் பெண் மந்திரியை போன் மூலம் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் மந்திரி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பாஜக நிர்வாகி நிகில் பாம்ரே மராட்டிய மாநில சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த விசாரணையின் போது பெண் மந்திரிக்கு தொல்லை கொடுத்த நபர் புனே போசரி பகுதியை சேர்ந்த அமோல் காலே(23) என்பது தெரியவந்தது.

அவர் அப்பகுதியில் கல்லூரியில் பயின்று வரும் மாணவர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த இளைஞரின் செல்போனை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.